உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சீட் கிடைக்காததால் தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் (எம்.பி) மேயருக்கு அடி உதை!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


தி.மு.க வேட்பாளர் பட்டியல் நேற்று (13-ம் தேதி) வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இதில் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நேற்று (13-ம் தேதி) இரவு அவரின் ஆதரவாளர்கள் அணைக்கட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதிலிருந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இன்று (14-ம் தேதி) நூற்றுக்கணக்கில் திரண்டு வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி வேட்பாளருமான ஏ.பி.நந்தகுமாரை சரமாரியாகத் தாக்க தொடங்கினர். இந்த கைகலப்பில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோர் சட்டை கிழிக்கப்பட்டது. அதோடு முன்னாள் அமைச்சர் துரைமுருகனையும் தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.

இதுகுறித்து, காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கூட்டத்தை அப்புறப்படுத்தி, மாவட்ட செயலாளர் நந்தகுமாரையும், முன்னாள் எம்.பி. முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த பிரச்னை குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, “அணைக்கட்டு தொகுதிக்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் அல்லது ஒன்றியச் செயலாளர் பாபு பெயர் வேட்பாளர் பட்டியலில் அடிபட்டது. இதில் நந்தகுமாருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. பாபுவிற்கு அணைக்கட்டு பகுதியில் கட்சி ஆதரவாளர்கள் அதிகம். நந்தகுமாருக்கு சீட் ஒதுக்கியதை கண்டித்து உடனே சாலை மறியலில் இறங்கினார்கள்.

இன்று கட்சி அலுவலகத்திற்கு புகுந்து மாவட்ட செயலாளரையே தாக்கும் அளவிற்கு வந்து நிற்கிறார்கள். பாபு மீது பல்வேறு வழக்கு உள்ளது. முக்கியமாக 2014-ல் செம்மரக்கடத்தல் வழக்கில் குண்டர் சட்டம் போடப்பட்டு ஆறு மாதம் சிறையில் இருந்தவர் பாபு. அவருக்கு நிச்சயமாக சீட் வழங்க முடியாது என மறுத்துவிட்டார் தளபதி. அதனை பொறுத்துக்கொள்ளாமல் இப்படி பொங்குகிறார்கள்.” என்கிறார்கள்.

Related posts

“மார்ச் 05 முதல் மின்வெட்டு இல்லை!“தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

wpengine

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான ரணில் விக்ரமசிங்க.

Maash

தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல்

wpengine