கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான சஞ்சீவ குமார சமரரத்னவின் படுகொலை சம்பவத்துடன் தெடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், குற்றத்திற்கு உதவியதாகவும், தகவல்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பிரதான பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியில் வசிக்கும் 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க மற்றும் 48 வயதான சேசத்புர தேவகே சாமந்தி ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் இருவரும் குற்றம் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தனர், ஆனால் அது தொடர்பில் முறைப்பாடு அளிக்க தவறியதுடன், குற்றவாளிகளுக்கு உதவியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவியதாகக் கூறப்படும் பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பிங்புர தேவகே இஷார செவ்வந்தி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடையவர்.
995892480V என்ற தேசிய அடையாள அட்டையை (NIC) கொண்டவர்.
இந்த கைதுகளின் மூலம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.