கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவினால் 7,50,000 ரூபா பெறுமதியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் அரசாங்கம் மாறியதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முல்லைத்தீவு, வவுனியா மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளிலும், வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்
அனுர கருணாதிலக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (07) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 2018இல் தற்போது எதிர்கட்சித் தவைவராக பதவி வகிக்கும் சஜித் பிரேமதாச வீடமைப்பு அதிகாரசபையின் அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் அக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியில் வெள்ள இடர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கி வாழ்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கும், புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், வறுமை நிலையில் வாழ்ந்த குடும்பங்களை சார்ந்தவர்களுக்கும், அனாதைசிறுவர்கள், யுத்தத்தின்போது கணவனை இழந்த பெண்தலைமைக் குடும்பங்களைசார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட அடிப்படை வசதிகளற்ற, தற்காலிக வீடுகளில் கையறுநிலையில் வாழ்கின்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 7,50,000 ரூபாய் பெறுமதியான வீடானது இரண்டுமாத காலப்பத்திக்குள் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தணையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
இருப்பினும் அரசாங்கம் மாற்றப்பட்டதன் விளைவாக இத்திட்ட நடவடிக்கையானது இடைநிறுத்தப்பட்டு கேட்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்தே வழங்கப்பட்டது. அரசாங்கள் மாறினாலும் இத்திட்டம் தொடர்பாக எவ்விதமான முன்னகர்வுகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.
இவ்வாறாக முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட வன்னியில் உள்ளவர்களும் வடக்கு, கிழக்கில் உள்ளவர்களும் இந்த வீட்டுத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயமாகும். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைய வேண்டும். என்ற உயரிய குறிக்கோளுடன் இந்த விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.