பிரதான செய்திகள்

கோத்தாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? சித்தார்த்தன் விளக்கம்-

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராவேன். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன். எமது மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தென்னிலங்கை தலைவர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவது இயல்பான விடயமொன்று. தென்னிலங்கை தலைவர்களுடனான அணுகுமுறைகள் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்க முடியும் என்பது பொதுப்படையான விடயமாகும்.

அதனடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ என்னை சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அக்கோரிக்கைக்கு அமைவாகவும் அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதால் அவருடைய நிலைப்பாடுகள் பற்றி அறிவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அச்சந்திப்பினை பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான ஆமோதிப்பைச் செய்திருந்தேன்.

இந்த சந்திப்பின்போது, அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உங்களுக்கு எதிராக மன நிலையுடன் இருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைப்பதற்கான சத்தியம் குறைவு என்று நேரடியாகவே கூறினேன்.

அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவரிடத்தில் காணப்படும் திட்டங்கள் தொடர்பில் நான் வினவியிருந்தேன்.
அச்சமயத்தில், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதற்கு அவர் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும் பொலிஸ் அதிகாரத்தினை வரையறைக்குட்பட்டதாக வழங்க முடியும் என்றும் காணி அதிகாரத்தினை உடனடியாக வழங்குவதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் கூறினார்.

குறிப்பாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வருகின்றபோது மாகாண சபையின் கீழ் காணி அதிகாரம் காணப்படுமாயின் அத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க முடியாது போகும் நிலைமை ஏற்படும் என்றும் கடந்த காலத்தில் அவ்வாறான அனுபவங்கள் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தென்னிலங்கை போன்று, வடக்கு கிழக்கினையும் சமச்சீராக கருதி பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை தான் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட அரசியல் ரீதியான அனைத்தையும் மஹிந்த ராஜபக்ஷவே கையாளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தபோது, 12ஆயிரம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி எமது காலத்திலேயே விடுவித்துள்ளோம். ஆகவே எஞ்சியவர்களை விடுவிப்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.

இதனை விடவும் கடந்த தேர்தலில் எமது தரப்பு 75ஆயிரம் வாக்குகள் வடக்கில் கிடைத்திருக்கின்றபோதும் இம்முறை அந்த மக்கள் அனைவரும் எதிர்காலம் நோக்கி சிந்தித்து எமக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கோத்தாபய குறிப்பிட்டார். அவ்வாறு தமிழ் மக்களின் ஆணையும் தனக்கு கிடைக்கின்றபோது சக்தியான ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு உந்துதல் அளிக்கும் என்றும் கூறினார்.

இனப்பிரச்சினை தீர்வு உட்பட அனைத்து விடயங்களிலும் நாம் கூட்டமைப்பாகவே தீர்மானிப்போம். கூட்டமைப்பின் தலைவரே தீர்க்கமான தீர்மானங்களை அறிவிப்பார் என்பதே
எமது தரப்பின் நிலைப்பாடு என்ற விடயத்தினையும் நான் அவருக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும் கோத்தாபயவுடனான சந்திப்பில் இவ்விடயங்களே பேசப்பட்டுள்ள நிலையில் இவற்றுக்கு அப்பால் வெளியாகும் பல்வறுவிதமான ஊடகத் தகவல் எவ்விதமான உண்மையும் இல்லை என்றார்.

Related posts

நல்லாட்சியின் பின்னால் இருந்து கொண்டு தவறு செய்ய இடமளிக்கப்படாது!

wpengine

வடக்கு,கிழக்கு கோத்தாவின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.

wpengine

இன்று மகிந்த ராஜபக்ச ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது- றிஷாட்

wpengine