திண்மக்கழிவுகளை புத்தளத்தில் கொட்டுவததை கைவிடப்பட வேண்டும்- அமைச்சர் ரிஷாட்

கொழும்பு நகர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று அங்கு கொட்டப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

காலாகாலமாக இந்தக் குப்பைகள் கொழும்பின் மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் கொட்டப்பட்டு வருவதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் கண் கூடாக காண்கின்றோம். மீத்தோட்டமுல்ல பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப்பிரதேச மக்கள் படுகின்ற அசௌகரியங்களும் அவஸ்தைகளும் சொல்ல முடியாதவை. அதற்கு மாற்றுத்தீர்வு ஒன்று தேவை. அதற்காக இந்தக் குப்பைகளை இன்னுமொரு மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வாழும் மக்களை கஷ்டத்திற்குள்ளாக்குவதற்கு எந்தவகையிலும் நியாயமில்லை.

இந்தக் திண்மக்கழிவுகளும் குப்பைகளும் புத்தளத்தில் கொட்டப்படும் போது அந்தப் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழல் அதிகமுள்ளது. ஏனெனில் குப்பை கொட்டப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து தாழ்வான பகுதியிலேயே அமைந்துள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில் வெள்ளப் பெருக்குகளும் ஏற்பட்டிருப்பதால் கொட்டப்படும் திண்மக்கழிவுகள் அள்ளுண்டு சென்று புத்தளக்களப்புக்குள்ளேயே செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

புத்தளத்திலுள்ள மீனவர்கள் இந்தக் களப்பை நம்பியே தமது வாழ்க்கையை நடாத்துகின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் இறால் வளர்ப்பும் இடம்பெறுகின்றது.

திண்மக்கழிவுகள் குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள், நச்சுப் பொருட்கள், உலோகங்கள், மின்கலங்கள், கிருமிநாசினிப் போத்தல்கள், குரோமியம் சார்ந்த பொருட்கள் இந்தக் களப்புக்குள் அடித்துச் செல்லப்படுவதால் களப்பு மாசடையும். இதனால் மீனவத்தொழிலும் இறால் வளார்ப்பும் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதுமட்டுமன்றி புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட சூழல் தாக்க மதிப்பறிக்கையில் பல்வேறு தெளிவுகள் காணப்படவேண்டியுள்ளது.

எனவே திண்மக்கழிவுகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கே கொட்டுவதென்ற தீர்மானம் கைவிடப்பட்டு இதற்கான மாற்றுத்தீர்வொன்று மேற்கொள்ள வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன். இந்த விடயம் தொடர்பில் ஈடுபடும் சகல தரப்பினரும் புத்தளத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு மாற்றுத்தீர்வொன்றை மேற்கொள்ளுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன் இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares