பள்ளி அமைக்கப்பட்டால் முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பவன் நானே! -வஜிர ஹிமி

(சுஐப் எம்.காசிம்)
கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று அபன்வள ஞானலோக ஹிமி, கொலொன்னாவ வஜிர ஹிமி ஆகியோர் இன்று தெரிவித்தனர்.
கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25/05/2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். பள்ளி சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்ற, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், உலமாக் காங்கிரசின் முக்கியஸ்தர் மௌலவி முபாரக் அப்துல் ரஷாதி, உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அபன்வள ஞானலோக ஹிமி, கொலன்னாவ வஜிர தேரர் ஆகியோர்கள் மேலும் கூறியதாவது,
இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் 90 சதவீதமான தேவைகளையும், நிவாரணப் பணிகளையும் கொலொன்னாவ பள்ளி சம்மேளனமே மேற்கொண்டு வருகின்றது. இன,மத,பேதமின்றி பணியாற்றும் இந்த சம்மேளனத்துக்கு, சிங்கள மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதோடு, பௌத்த தேரர்கள் ஆகிய நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிகின்றோம். இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் கிளப்பி ஆதாயம் தேடுவோருக்கு இந்தப் பள்ளியின் பணிகள் ஒரு சாட்டையாக இருக்குமென நம்புகின்றேன்.
கடந்த காலங்களில் இனவாதிகளும், ஊடகங்களும் இனவாதத்தை பரப்பி, மக்களை பிரித்தாள நினைத்தன. இப்போதும் சில தனியார் ஊடகங்கள் அந்தக் கைங்கரியத்தை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறானவர்களின் நல்ல பணிகளை அவர்கள் எடுத்துச் சொல்வதை விடுத்து, இல்லாத பொல்லாதவைகளைக் காட்டி வருகின்றன. இவர்களுக்கு நாங்கள் ஒருபோதும் பயமில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவுக்கு இந்தக் கொலன்னாவ பிரதேசம் எடுத்துக்காட்டு.
பன்சலையில் தங்கியிருக்கும் எமது சமூகத்தைச் சார்ந்த அகதிகளுக்கு பெரும்பாலான உதவிகளை முஸ்லிம் பரோபகாரிகளும், இந்தச் சம்மேளனமுமே வழங்கி வருகின்றன. இதனை நாங்கள் மெச்சுகின்றோம். சம்மேளனத்தின் எதிர்காலப் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கொலொன்னாவ வஜிர ஹிமி, அகதிகளுக்கு பள்ளிவாசல்கள் மேற்கொண்டு வரும் உதவிகளை நாங்கள் மறக்கப் போவதில்லை என்றும், இந்தப் பிரதேசத்தில் இன்னுமொரு பள்ளிவாசல் அமைக்கப்படுவதற்கு முயற்சிக்கும் போது, தானே முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பேன் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
பள்ளி சம்மேளனத் தலைவர் ஐ.வை.எம். ஹனீப் அகதிகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.