கட்டுரைகள்பிரதான செய்திகள்

கைகூடிக் கைகழுவும் காலம்; ரணிலுக்கு அடித்தது யோகம்!

-சுஐப் எம். காசிம்-

அரச இயந்திரத்தின் இரட்டைச் சக்கரங்களாக கடந்த இரு தசாப்தங்களாக மஹிந்த ராஜபக்ஷவும், ரணிலும்தான் சுழல்கின்றனர். அரசாங்கத்தின் அச்சாணியாகக் கருதப்படும் உயர் பதவிக்குரிய பிதாமகன்களும் இவ்விருவரும்தான்.2004 முதல் இன்று வரைக்கும் வேறு எவரும் இப்பதவிக்கு எதிரும் புதிருமாக போட்டியிடவில்லை. இதுதான், இவர்களை அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக்கி உள்ளது. நாட்டு அரசியலில் கடந்த இரு தசாப்தங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் இருக்கிறதே!(2004-2022) அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நண்பரும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.

இவ்விருவரும் இப்பதவிக்காக இக்காலப் பகுதியில் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களும், வியூகங்களும்தான் தேசிய அரசியலைச் சூடாக்கி சர்வதேசத்தின் பார்வையை திருப்பியிருந்தது. அலரி மாளிகைக்குள் வருவதும் அங்கிருந்து வெளியேறுவதுமான அரசியல் களங்கள், ஆதரவாளர்களின் அபிமானங்களை ஆற்றுப்படுத்தின. இந்நகர்வுகள் சுழன்று இன்று ரணிலின் கரங்களில் வந்துள்ளது. ‘இப் பதவியை அரசாங்கத்தரப்பு விரும்பித்தானே வழங்கியது, இதிலென்ன வியூகம்’ என்கலாம் சிலர். வழங்குமளவுக்கு நிலவரங்களை இறுக்கிய பின்னணி ரணிலிடம் இருப்பது எவருக்கும் தெரியாமலா போகும்.

பதவியேற்ற கணமே வந்த வாழ்த்துக்களும், டொலரின் பெறுமதி வீழ்ந்ததும் இறுக்கிய பின்னணிக்குள் இருப்பவைதானே. தன்னிடமிருந்த வியூகப்பலமும் சர்வதேசப் பலமும்தான், வியர்வை சிந்தாமல் ரணிலைப் பிரதமராக்கியது. இது சிலரை வியர்வை வராமலும் ஆக்கியிருக்கிறது. ஜனநாயகம் பற்றிப்பேசும் சர்வதேசம் இவரின் தெரிவிலிருந்தவை குறித்து வாய் திறக்காததும், ரணிலுக்கு அடித்த அதிஷ்டம்தான். மிதவாதத் தலைவராக தன்னை அடையாளம் காட்டிய இவர், தேசத்துக்குரிய அடையாளமாக தென்பட்டதில்லை. இதனால் என்ன? தேவையான நேரம் நாட்டுக்கு தேவைப்பட்டிருக்கிறார். பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதும் இதைத்தான்.

1970 இல் அரசியலை ஆரம்பித்த இவர்,1977 முதல் நடைபெற்ற சகல தேர்தலிலும் பாராளுமன்றம் நுழைந்தார். எப்படியோ இம்முறையும் 23.06.2021 பாராளுமன்றத்துக்குள் நுழைந்தவர் என்பதால், தோற்றவர் என்ற கருத்து வலுவிழக்கிறதுதானே!1993 இல் அதிஷ்டமாகப் பற்றிக்கொண்ட பிரதமர் பதவி, அடிக்கடி இவரிடம் வந்தே செல்கிறது. பின்னர் 2001, 2014, 2015, 2018 இன்னும், இப்போது 2022.05.12 லும் வந்திருக்கிறது.

ஜனநாயகத்தை உச்சளவில் பேணும் ஒரு அரசியல்வாதி இந்தப் பிரதமர். இதனால், சர்வதேசத்தில் இவருக்குப் பெரும் பிரபலம். இவ்வாறான இவர், இப்படியா பிரதமராவது? என்ற விமர்சனம் இருக்கவே செய்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதம் இருப்பதால், 113 ஆசனத்தை எளிதாகக் காண்பிக்கலாம் புதிய பிரதமர். இது ராஜதந்திர நெருக்கடிக்கு மட்டுமல்ல ராஜ்யத்தின் பூஜ்ய நிலைமைக்கும் தீர்வாகலாம் என்பதே அரசியல் விவேகிகளின் ஆருடம். மாறாக ஏனைய எல்லாம் எழுமாந்த விமர்சனங்கள்தான். எதுவரைக்கும் தெரியுமா? மக்களைப் பீடித்துள்ள நெருக்கடிகள் நீங்கும்வரை.

Related posts

நாளை அமைச்சரவை கூட்டம்! கண்டியில்

wpengine

நல்லாட்சி அரசுக்கு எதிராக ஜுன் 3ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம்

wpengine

சிங்கத்திடம் இருந்து உயிர் தப்பிய 2 வயது குழந்தை (வீடியோ)

wpengine