கூட்டமைப்பை விமர்சிக்க அமீர் அலிக்கு அருகதையில்லை: அரியநேத்திரன் (பா.உ)

மேடைகளிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிக்க பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எவ்விதத்திலும் அருகதையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தாந்தாமலை கச்சுக்கொடி சுவாமிமலையில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பு நேற்று மாலை இடம் பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துக்கூறிய அவர்,

அண்மையில் பிரதிஅமைச்சர் அமீர்அலி ஒருகூட்டத்தில் உரையாற்றும்போது எமது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரனை கடுமையான தொணியில் விமர்சித்தது மட்டுமன்றி,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்மையும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மிகவும் கீழ்த்தரமாக கேவலப்படுத்தி உரையாற்றியமை கண்டிக்கத்தக்க செயலாகும்.

கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அமீர் அலி கடந்த 2010  தேர்தலில் தோல்வியடைந்தவர்.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் வழமை. அது எமக்கு மட்டும் ஏற்பட்டதொன்றல்ல நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் எமது கொள்கையில் இருந்தோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தோ விலகவில்லை.

பதவிக்காகவோ, சலுகைக்காகவோ, அமீர் அலியைப் போன்று சோரம் போகவில்லை. அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் நாக்கை வழித்து திரிந்ததாக அமீர் அலி கூறுவது போன்று எமது கட்சி தலைமை எவரிடமும் நாக்கை வழிக்கவும் இல்லை,

பின்கதவால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்‌ஷவிடம் கெஞ்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துவிட்டு பதவி கிடைத்தபின் வேறு கட்சியில் இணைந்து தமது பதவியை தக்கவைக்கவும் இல்லை.

நாம் ஒவ்வொரு தேர்தலிலும் காற்றடிக்கும் பக்கமெல்லாம் சலுகைக்காக சோரம்போய் அரசியல் செய்த வரலாறு எமக்கில்லை.

மட்டக்களப்பில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் கல்வி வலயம் பற்றி நியாயம் கற்பிக்கும் அரசியல்வாதிகள் அதில் சில தமிழ் பாடசாலைகளை இணைத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக அமீர் அலி கூறியுள்ளது முற்றிலும் உண்மை.

அப்போது நானும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த விடயத்தை பகிரங்கமாக எதிர்த்தேன்.

தமிழ் பாடசாலைகளும் முஸ்லிம் பாடசாலைகளும் இணைந்து நிலத்தொடர்பாக ஒற்றுமையாக காலாகாலமாக செயல்பட்டுவந்த கல்வி வலயங்களை நிலத்தொடர்பு இல்லாமல், திட்டமிட்ட இனரீதியா முஸ்லிம் பாடசாலைகளை ஒன்றுணைத்து தனியான கல்விவலயமாக உருவாக்குவது தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் கசப்புணர்வுகளை தோற்றுவிக்கும் என்பதால் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம்.

அதனை சமாளிப்பதற்காக நிலத்தொடர்பற்ற முஸ்ஷ்லிம் பாடசாலைகளை உள்ளடக்கிய இந்த கல்விவலயத்தில் கல்குடா வலயத்தில் உள்ள ஒருசில தமிழ் பாடசாலைகளையும் சேர்த்துக்கொள்ள அமீர் அலி மற்றும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்தனர்.

அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய நாம் எதிர்ப்பு தெரிவித்து அதை தடுத்தோம். நிலத்தொடர்பற்ற கல்விவலயம் இனரீதியாக இருக்ககூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு.

நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் ஆரம்பித்துவிட்டு பெயரளவில் ஓரிரு தமிழ் பாடசாலைகளை சேர்ப்பது என்ன நியாயம் என்பதை நாம் கேட்டோம்.

அமீர் அலி எமது தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உரையாற்றியுள்ளார். அவரைபோன்று நாம் அரசியல் செய்யவில்லை.

எமது விடுதலைப் பயணம் இரத்தமும் சதையும் சிந்தி இலட்சக்கணக்கான உயிர் தியாகம் செய்த உன்னத அரசியல் பாதை.

அதை விமர்சிக்க அவருக்கு உரிமை இல்லை. இம்முறை 2015ல் இடம்பெற்ற தேர்தலில் கணேசமூர்த்தியின் ஆதரவால் தமிழர்களின் வாக்குகளை எடுத்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானவர் என்பது தமிழ்மக்களுக்கு நன்கு தெரியும்.

தமிழ் மக்களையும் தமிழ் தேசியத்தையும் புண்படும்படி அமீர் அலியோ அல்லது அவர் சார்ந்த எவரோ, கதைப்பது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை தூவுவது போன்ற செயலாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளாக யார் தெரிவு செய்ய வேண்டும் என்பது வாக்களிக்கும் எமது மக்களுக்கு தெரியும் என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares