கிழக்கில் தொல்பொருள் செயலணியும், ஜனாதிபதியின் வாக்குறுதியும். முஸ்லிம் தலைவர்களின் மௌனம் கலையுமா ?

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது  

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களின் பணிப்புரைக்கமைய கடந்த 14.05.2020 அன்று பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்ற விகாரைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள விகாராதிபதிகளுடன் கலந்துரையாடினார்கள்.

அதன்பின்பு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை இனம்கண்டு அவைகளை பாதுகாத்து நிர்வகிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனெரல் கமால் குணரத்ன தலைமையில் பன்னிரெண்டு பேர்கள்கொண்ட செயலணி ஒன்று கடந்த 01.06.2020 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இந்த செயலணியில் நியமிக்கப்படவில்லை. மாறாக பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், பௌத்த மேலாதிக்கவாதிகளுமே இதில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.  

கடந்த 01.07.2020 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இந்த விவகாரம் முன்வைக்கப்பட்டது. அதாவது கிழக்குமாகான தொல்பொருள் செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையினை அமைச்சர் டக்லஸ் அவர்கள் முன்வைத்திருந்தார்.

அமைச்சர் டக்ளசின் இந்த கோரிக்கையினை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார். அதாவது இந்த செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் இதனை 01.07.2020 ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் தனது முகநூளில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழி நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதற்குமாறாக அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களைச்சேர்ந்த நான்கு தேரர்கள் மேலதிகமாக கிழக்குமாகான தொல்பொருள் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது வர்த்தமாணியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன் ?

நாட்டில் எத்தனையோ தொல்பொருள் பிரதேசங்கள் இருக்கும்போது தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக இந்த செயலணி நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

தொல்பொருளை பாதுகாத்தல் என்றபோர்வையில் கிழக்குமாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை சுவீகரிக்கப்போகின்றார்களா ?

எனவே இதுவிடயமாக முஸ்லிம் தலைவர்கள் தங்களது மௌனத்தை கலைத்து இதயசுத்தியுடன் செயல்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டதைப்போன்று அனைத்து முஸ்லிம் தலைமைகளும் ஒன்றுபட்டு ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து பேசுவதன்மூலம் இதற்கான தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க முடியும்.  

பேரினவாதிகளின் திட்டமிடலுக்கு ஏற்ப காரியங்கள் அனைத்தும் முடிவடைந்தபின்பு அறிக்கைகளை மட்டும் விடுவதில் எந்த பிரயோசனமுமில்லை என்பது கிழக்குமாகான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares