செய்திகள்பிரதான செய்திகள்

கலா ஓயா ஆற்றில் குளிப்பதற்காக சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு .

புத்தளம் – வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலா ஓயா ஆற்றில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (17) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

மதுரங்குளி – கணமூலையைச் சேர்ந்த அபுதாஹிர் முஹம்மது அப்ராஜ் (அப்ரான்) எனும் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த குறித்த இளைஞன் மதுரங்குளி நகரில் உள்ள பிரபல பாமசி ஒன்றில் இரண்டு வருடங்களுக்கும் மேல் பணியாற்றி வந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கலாஓயா ஆற்றில் நீராடுவதற்காக குறித்த இளைஞன் உட்பட நான்கு பேர் முச்சக்கர வண்டியொன்றில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு, கலா ஓயாவில் தனது சக நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் 8 அடி ஆழமுள்ள குழி ஒன்றுக்குள் சிக்குண்டு, காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. 

சுமார் முப்பது நிமிடங்களின் பின்னரே குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் சம்பவம் பற்றி வன்னாத்தவில்லு பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் , புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவம் இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை முன்னெடுத்தார். 

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனையின் பின்னர் இளைஞனின் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த இளைஞனின் திடீர் மரணம் மதுரங்குளி – கணமூலை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பலஸ்தீன முஸ்லிம்கள் விடயத்தில் ஏன் மௌனம்? குஜராத்தை சுடுகாடாக்கிய மோடிக்கு நல்லாட்சிக்கு ஆதரவு

wpengine

கணேமுல்ல சஞ்சீவ கொலை, செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.12 இலட்சம் சன்மானம்.

Maash

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

wpengine