கருணாவை விட தமிழ் கூட்டமைப்பு படுமோசமானது

“முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அம்பாறையில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய ராஜபக்ச அரசுக்கும் நாட்டுக்கும் அவர் துரோகமிழைத்து விட்டார்.


ஆனால், கருணா அம்மானின் துரோகத்தைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நாட்டுக்குச் செய்த – செய்துகொண்டிருக்கின்ற துரோகம் படுமோசமானது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைத் தாம் படுகொலை செய்ததாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா அம்மான் ஆற்றிய சர்சைக்குரிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


“கருணா அம்மானைத் தண்டிப்பதா? இல்லையா? என்று நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்கும். இதில் அரசு தலையிட முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர் ஒருவரின் அறிக்கைக்கு கருணா அம்மான் பதிலடி கொடுத்து உரையாற்றும்போதுதான் ஆனையிறவு சண்டையையும் அதில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் விடயத்தையும் நினைவுபடுத்தியுள்ளார்.


உண்மையில் கருணா அம்மான் இப்போது அரசுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ சவால் அல்லர். அவர் கடந்த காலப் போரை நினைவுபடுத்தி மட்டுமே பேசியுள்ளார்.


எனினும், ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை தாம் கொன்றதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயம். இப்படி அவர் பேசுவதற்கு இப்போது எந்த உரிமையும் இல்லை.
அவரை நாம் நம்பித்தான் பிரதி அமைச்சுப் பதவியையும் வழங்கியிருந்தோம். ஆனால், அவர் இப்போது துரோகமிழைத்துவிட்டார்.


ஆனால், கருணா அம்மானின் துரோகத்தைவிடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் துரோகம் படுமோசமானது. அவர்கள் இப்போதும் இந்த நாட்டைத் துண்டாடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


‘சமஷ்டி’ ஊடாகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கனவை நிறைவேற்றக் கூட்டமைப்பினர் படாதபாடு படுகின்றார்கள். ஆனால், இதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்கவே மாட்டாது” – என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares