ஒருதடவையும் தொழாதவர் போரில் மரணித்ததற்காக அவருக்கு நபியவர்கள் செய்த அறிவிப்பும், போராட்டத்தின் முக்கியத்துவமும்.

உஹது யுத்தம் நடைபெற்று முடிந்ததன் பின்பு போரில் காயமடைந்தவர்களையும், கொல்லப்பட்ட (சஹீதான) நபித்தோழர்களையும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கடும் காயங்களுக்குள்ளாகி உயிர் பிரியும் நிலையில் இருந்தவர்களில் “உஸைரிம்” என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரலி) என்பவரும் ஒருவர்.

இவர் ஒருபோதும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில்லை. பல முறை இவருக்கு இஸ்லாத்தை எடுத்துக் கூறி அழைப்பு விடுத்திருந்தும் அவர் இஸ்லாத்தை ஏற்காமல் மறுத்துவந்தார்.

இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் பிடிக்காத ஒருவர் போர்க்களத்தில் படுகாயம் அடைந்த நிலையை நபித் தோழர்கள் பார்த்தபோது, இஸ்லாத்தை பிடிக்காத இவர் ஏன் இங்கு வந்தார் என்று கூறிக்கொண்டு அவரிடம் விசாரித்தனர்.

அதற்கு உஸைரிம் அவர்கள் “இஸ்லாத்தின் மீதுள்ள பிரியத்தினால்தான் போரில் கலந்துகொண்டேன். நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளுடன் போர் புரிந்தேன். இப்போது எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கின்றீர்கள்” என்று தனது பேச்சை முடிக்கின்ற நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

இவரது இந்த நிலை பற்றி நபி அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு நபி அவர்கள் “அவர் சுவனவாசிகளில் ஒருவர்” என்றார்கள்.

இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகையில் உஸைரிம் அவர்கள் ஒரு நேரத் தொழுகை கூட தொழவில்லை. இருந்தும் நபியவர்களின் நாவினால் உஸைரிம் அவர்கள் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.

இதிலிருந்து எங்களால் புரிந்துகொள்ளக்கூடியது என்ன ?

இஸ்லாத்திற்கும், அதனை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் தீங்குகள், அநீதிகள், அடக்குமுறைகள் அல்லது மார்க்கத்தை பின்பற்றுவதில் தடைகள் ஏற்படுகின்றபோது அவர்களுக்கு எதிராக போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

அதில் ஒன்றாகவே இதனை நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும். இஸ்லாத்தை எத்தனையோ தடவைகள் எடுத்துக்கூறியும் மறுத்துவந்த உஸைரிம் அவர்கள் போரில் கலந்துகொண்டு மரணித்ததற்காக அவரை சுவனவாசி என்று அறிவிப்பு செய்ததன் மூலம் போராட்டத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்ள முடிகிறது.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது     

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares