Breaking
Thu. Sep 12th, 2024

(சுஐப் எம் காசிம்)

முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எண்ணமாகுமென்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று மாலை தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைவை மேலும் மெருகூட்டி அதனை முழுமைப்படுத்துவதற்காக முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் அரசியல் மறுசீரமைப்பு ஆலோசனைக்குழு நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நாம் இந்தத் திட்ட வரைபை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எல்லோரையும் வீழ்த்திவிட்டு நாம் மட்டும் தான் பாரளுமன்றத்தில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களும் நாமல்லர். கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தின் சகோதரக்கட்சிகளுடன் விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு எமக்குள்ளே பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதும் அவற்றுக்கும் அப்பால் பொதுவான இணக்கப்பாட்டுடன் இந்த சமூகத்திற்கு ஏற்றவகையில் ஓர் அரசியல் திட்டம் அமைய வேண்டுமென்பதில் எமக்கு இரண்டுபட்ட கருத்துக் கிடையாது. அந்த வகையிலேயே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு அனுபவங்களைப் பெற்று சமூகத்திற்கு பணியாற்றி இன்று “முன்னாள்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கும் சமூகப் பணியாளர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்கின்றோம்.419bab98-2465-4192-a887-8c80a50e1d16

தொடர்ந்து சுமார் 120 பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களையும் கல்விமான்களையும் வரவழைத்து ஆலோசனை பெறவுள்ளோம். அதன் பிறகு சமூகத்தின் சமூகத்தின் தூண்களாக இருக்கும் ஜமியத்துல் உலமா, சூரா கவுன்சில், முஸ்லிம் கவுன்சில் உட்பட பல்வேறு அமைப்புக்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து அவற்றை உள்வாங்க உள்ளோம். இதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் அடிமட்ட மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வோம். அத்துடன் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுகட்சிகளுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்காக அந்தக் கட்சிகளுடனும் பேச்சு நடத்த எமது கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழ்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யாப்புத்திருத்தங்கள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் எல்லாமே முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாகவே அமைந்துள்ளது. இனியாவது நாம் இந்தப் பிழையை விடக்கூடாது. எனவே தான் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம் கட்சிகளை இந்த விடயம் தொடர்பில் அமர்ந்து ஒன்றாகப் பேசுவோம் என்று அழைப்பு விடுத்தேன்.

வடமாகாண சபை தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைபு தொடர்பில் நாம் ஆதரவு அளிக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கு இதைத்தான் வழங்க வேண்டுமென்று கோரும் யோக்கியதை அந்த சபைக்கு கிடையாது. காரணம் முஸ்லிம் சமூகத்தின் ஆணைபெற்ற பல்வேறு கட்சிகள் இருக்கும் போது அவர்கள் தமது சமூகத்தின் தேவையை கோரிக்கொள்வர்.

என்னைப் பொறுத்தவரையில் இது தொடர்பில் இன்னொரு விடயத்தையும் தொட்டுக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் இருக்கின்றேன். 1990 ஆம் ஆண்டு புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் சமூகம் மீண்டும் அந்த பிரதேசங்களுக்கு சென்று வாழ ஆசைப்படுகின்றது. எனினும் மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை அரவணைக்க இந்த வடமாகாண சபை ஒரு துளியேனும் முயற்சிக்கவில்லை.

நான் சில நாட்களுக்கு முன்னர் “பொம்மைவெளியில்” முஸ்லிம்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்திற்கு சென்ற போது அவர்களின் அவலங்களைக்கண்டு கவலையடைந்தேன். முஸ்லிம்களுக்கு இத்தகைய தீர்வொன்றை கொடுங்கள் என வரைவில் சுட்டிக்கட்டியிருக்கும் வடமாகாண சபை இந்த மக்களின் பரிதாப நிலையை பார்த்துக்கொண்டிருக்கின்றது. எந்த உதவியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது தான் யதார்த்த நிலை.

எனவே தமிழ் – முஸ்லிம் உறவு வார்த்தைகளில் மட்டும் இருக்கக் கூடாது. செயற்பாடுகள் நன்றாக இருந்தால் சமூகங்களுக்கு இடையே உறவு வலுப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *