பிரதான செய்திகள்

எரிபொருள் தொடர்பான பிரச்சினை திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்

                                                                  எரிசக்தி அமைச்சின் செயலாளர்.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா அவர்கள் தெரிவித்தார்.

“வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்ஹ அவர்களும் கலந்துகொண்ட இந்த ஊடக சந்திப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அவர்கள் நடத்தினார்.

ஏற்கனவே டீசல் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், இந்த மாதம் நான்கு கப்பல்களில் இருந்து 172,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கும் எரிபொருள் விரைவாக விநியோகிக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி. ஆர். ஒல்கா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பல கச்சா எண்ணெய்க் கப்பல்கள் (30,000 மெட்ரிக் தொன்) பெறப்பட்டுள்ளது அதன் மூலம் எரிபொருள் எண்ணெய் பயன்படுத்தும் வெஸ்ட் கோர்ட் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்க முடியும் என்று செயலாளர் சுட்டிக்காட்டினார். மார்ச் மாதம் 20ஆம் திகதி அளவில் மேலும் சில கச்சா எண்ணெய்க் கப்பல்கள் வரவுள்ளன.

“எரிபொருள் கையிருப்பு கிடைத்ததும், தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகள் மிக விரைவாக தீரும். எங்களின் திட்டங்களின்படி தேவையான டொலர்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர்” என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

எரிசக்தி துறையின் எதிர்காலத் திட்டங்களை விளக்கிய செயலாளர் ஒல்கா அவர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தியதன் பின்னர் கொழும்பு வழியாகச் செல்லாமல் வடக்கு, வட மத்திய, பதுளை போன்ற பகுதிகளுக்கு திருகோணமலை ஊடாக எண்ணெய் விநியோகம் மேற்கொள்ள முடியும் என்றார். இதன் மூலம் மாதாந்தம் சுமார் 800 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த செயலாளர், இது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், அவ்வாறானதொரு தீர்மானத்தை விவேகத்துடன் எடுக்க வேண்டும் என்றார்.

இந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கவில்லை எனவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எரிபொருள் விநியோகம் சாதாரணமாக நடைபெற்ற போதிலும், நாளாந்த எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் விலை உயரலாம் என்ற அச்சத்தில் பல நுகர்வோர் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியுள்ளனர் .

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மிக அதிக டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும், இந்த நேரத்தில் எரிபொருள் பாவனையை சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தினால் நாட்டுக்கு நல்லது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
10.03.2022

Related posts

மன்னார் இ.போ.ச பஸ் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு (படங்கள்)

wpengine

இலங்கையில் பேஸ்புக் பாவனை அதிகரிப்பு-பேராசியர் லோஷந்தக ரணதுங்க

wpengine

இணைக்குழு தலைவர் அலிஸாஹிர் மௌலானா

wpengine