அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்குவைத்து வரவு செலவு திட்டம், ஆளும் கட்சி மோதல் , எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு .

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்காக ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்பிக்கப்பட உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டமானது, முழு அளவில் தேர்தலை இலக்கு வைத்ததாக அமைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வரி அதிகரிப்பற்ற, நிவாரணங்கள் நிறைந்த வரவு – செலவு திட்டத்தையே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சமர்பிக்க உள்ளார். இவ்வாறானதொரு நிலையில், ஆளும் கட்சி முரண்பாடுகளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளிலும் தேசிய அரசியலில் பேசும் பொருளாகியுள்ளன.

ஆளும் கட்சியின் பதவி விலகல்கள்

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாக அடையாளப்படுத்தப்பட்டாலும், தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்கள் அமைந்துள்ளன. இதற்கு பிரதான காரணம் அரசாங்கத்தில் தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் காணப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகள் மீறப்பட்டு முழு அளவில் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளுக்குள் ஆட்சிமுறை சென்றுள்ளமையாகும்.

அண்மைய காலத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலையை தொடர்ந்து ஆளும் கட்சியின் உள்வீட்டு முரண்பாடுகள் வீதி சண்டைகளாக வெளிவரத் தொடங்கியுள்ளன. ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் செனேஷ் பண்டார திசாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததுடனேயே இந்த முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வர தொடங்கின. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரின் கூட்டு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நியமனம் பெற்ற  செனேஷ் பண்டார திசாநாயக்க, திடீரென பதவியை இராஜினாமா செய்ததன் பின்னணியில் ஜே.வி.பி யின் முக்கியஸ்தர் ஒருவருடனான முரண்பாடுகள் காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இவரது பதவி விலகளை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டு வந்த றமால் சிறிவர்தன தனது இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார். இந்த இராஜினாமா கடிதத்தை கையளிப்பதற்கு முன்னர், இது குறித்து அறிந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, றமால் சிறிவர்தனவைத் தொடர்புக் கொண்டு பிரச்சினைகள் இருப்பின் பேச்சுவாரத்தைகள் ஊடாக தீர்வு காண முடியும். எனவே எதற்கும் அவசரப்பட வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் தொடர்புக்கொண்டு றமால் சிறிவர்தனவுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஆளும் தரப்பிடமிருந்து தான் எதிர்க்கொண்ட அழுத்தங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து விடுவார் என்ற அச்சம் ஜனாதிபதிக்கு இருந்ததன் காரணமாகவே றமால் சிறிவர்தனவை பொறுமைக்காக்குமாறு கோரியிருந்தார். மறுபுறம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இவருக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது. இருப்பினும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே றமால் சிறிவர்தன பதவி விலக காரணம் என கூறப்படுகிறது. ஆனால்  மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) பிரபல தலைவராக இருந்து வரும் பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் ஜனாதிபதி அநுர எடுக்க மாட்டார் என்பதாலேயே இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்  றமால் சிறிவர்தன பதவி விலகினார். இதனை தொடர்ந்து தேசிய வீடமைப்பு அதிகாரச் சபையின் தலைவர்  என்.பி. மொன்டி ரணதுங்கவும் பதவி விலகினார்.

ஜே.வி.பி அடுத்த தலைவர் பிமல்?

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) பிரபல தலைவர்களில் ஒருவராக பிமல் ரத்நாயக்க மிக நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறார். அடுத்த தலைமைத்துவத்திற்கான தெரிவாக ஜே.வி.பியின் அனைத்து மட்ட உறுப்பினர்களாலும் பிமல் ரத்நாயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு குருணாகல் மாவட்டத்திற்கு முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான பிமல் ரத்நாயக்க, அதற்கு முன்பிருந்தே ஜே.வி.பி முக்கிய செயல்பாட்டளராக இருந்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் ஜே.வி.பியின் அடுத்த தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவாக அதிக வாய்ப்புகள் உள்ளதால் ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ நேர்மையாக செயல்பட்டு பிரச்சினையை தீர்க்க மாட்டார்கள் என்ற சந்தேகத்திலேயே றமால் சிறிவர்தன பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி மோதல்

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜே.வி.பி அல்லாத தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் கெடுபிடிகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் பிரதமர் ஹரினியை சந்துத்து கலந்துரையாடியுள்ளனர். இதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களின் போது பாராளுமன்றத்தில் மாத்திரம் பதிலளிக்கும் பிரதமர் ஹரினி உள்ளிட்ட ஜே.வி.பி அல்லாத தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் ஜே.வி.பியினர் முழு அளவில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.

மஹிந்த இல்லத்தில் சந்திப்பு

யோஷித ராஜபக்ஷவின் கைதினை தொடர்ந்து அரசாங்கம் தனது குடும்பத்தை இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஒரணியில் திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார். இதன் பிரகாரம் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி செயல்படும் சிலரை தன்னை சந்திக்க அழைப்பு விடுக்குமாறு நாமல் ராஜபகஷவுக்கு மஹிந்த குறிப்பிட்டிருந்தார். இதன் போது குறிப்பிட் சிலரை அழைக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் நிமல் லான்சா மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. செஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர மற்றும்  ரமேஷ் பத்திரன உட்பட பொதுஜன பெரமுனவின்  முக்கியஸ்தர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு கடந்த வாரம் விஜேராம இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.  பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்தின் செயல்பாடுகளே எம்மை பெரிதும் பாதித்ததாக இதன் போது குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீடித்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  பொதுஜன பெரமுன போட்டியிட உள்ளதால், கட்சியுடன் இணைந்து பயணிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐ.தே.க – ஐ.ம.ச பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இரு தரப்பிலும் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அதன் முன்னேற்றம் குறித்து இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களால் அறிவிக்கப்படும். லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 11ஆம் திகதி நாடு திரும்புவார். எனவே 10ஆம் திகதிக்கு முன்னர் மீண்டுமொரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இருதரப்புமே இணக்கம் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இருதரப்பு இணக்கப்பாட்டுடன் பொது சின்னமொன்று அறிமுகப்படுத்தப்பட்டு, இரு கட்சிகளும் சுயாதீனமாக செயற்படக் கூடியவாறு பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts

பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் வாழ்த்து செய்தி

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக மன்னாரில் சாத்விகப் போராட்டம்

wpengine

ராஜபஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! 17 பேர் கையொப்பம்

wpengine