உப்பு நிறுவனத்திற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கிய கோட்டாபய

2018 ஆம் ஆண்டு முதல் நட்டத்தில் இயங்கிவரும் வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்திற்கு (Lanka salt Ltd) இலாபமீட்டுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வருடகால அவகாசம் வழங்கியுள்ளார்.

வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டில் இலாபம் 70 கோடி ஆகும். 2017ஆம் ஆண்டாகும்போது இலாபம் 32 கோடிகளாக குறைவடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு 28 இலட்சங்களாகவும் 2019ஆம் ஆண்டு ஒரு கோடியே தொன்ணூற்றி ஒரு இலட்சமாக இந்நிறுவனம் நட்டமடைந்துள்ளது.

மூன்று வருட காலத்திற்குள் ஏற்பட்ட நட்டத்தை கண்டறிந்து இலாபமீட்டுவது தற்போதைய தலைவர் உட்பட பணிப்பாளர் சபையின் பொறுப்பாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு (Lanka salt Ltd) நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை பரிசீலிப்பதற்காக நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

1998ஆம் ஆண்டு தனியார்மயப்படுத்த திட்டமிட்டிருந்த உப்பு கூட்டுத்தாபனத்தை மஹிந்த ராஜபக்ஷ தொழிலாளர் அமைச்சராக தலையிட்டு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் (ETF) கீழ் கொண்டு வந்தார். பின்னர் நிறுவனத்தின் மூலதனத்தில் 90% வீதம் (ETF) நிறுவனமும் 10% வீதத்தை ஊழியர்களும் பெற்றுக்கொண்ட வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனம் (Lanka salt Ltd) பாரியளவில் இலாபமீட்டும் நிறுவனமாக மாறியது.

(ETF) நிதியத்தின்கீழ் இயங்கிவரும் நிறுவனம் ஒன்று நட்டமடைவது எவ்விதத்திலும் இடம்பெறக்கூடாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எதிர்வரும் 06 மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கான திட்டங்களை வெவ்வேறாக தயார் செய்து இலாபமீட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

உப்பு இறக்குமதியை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்த வேண்டும். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததுபோல் தமது உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு (Lanka salt Ltd) நிறுவனத்தை மாற்ற வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நட்டமடைவதற்கான காரணங்களை முன்வைப்பதற்கு பதிலாக இலாபமீட்டுவதற்கான மூலோபாயங்களே தமக்கு தேவையென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் ஸ்ரீயான் த சில்வா விஜேரத்ன> வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு (Lanka salt Ltd) நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரன உள்ளிட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares