இரணைதீவு மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும்! வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

இரணைதீவு மக்கள் கடந்த கால யுத்தத்தினால் குறித்த தமது தீவில் இருந்து வெளியேற்றப்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளாகி, இரணைமாதா நகர் என்னும் கிராமத்திற்கு இடம்பெயர்ந்து, இதுவரை இவர்கள் மீள்குடியமர்த்தப்படாமல் தற்போதும் அங்கேயே வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தவர்களது பிரதான தொழிலாக கடற்றொழில் அமைந்திருக்கும் காரணத்தால் இது வரைகாலமும் இரணைதீவிற்கு சென்று தங்கி தொழில் செய்து வந்துகொண்டிருந்த இவ்வேளையில், கடந்த 22-04-2016 முதல் இலங்கை கடற்படையினரால் அப்பகுதியில் தங்கியிருந்து தொழில் செய்வதற்கான அனுமதி குறித்த மீனவர் சமூகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த மீனவர் சமூகம் குறித்த நாள் தொடக்கம் இன்றுவரை கடற்றொழிலில் ஈடுபட முடியாத துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு, இவர்களது வாழ்வாதாரமும் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 26 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் அவர்களால் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு எழுத்துமூலமான அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டது, அதனையடுத்து அமைச்சர் அவர்களால், குறித்த சமூகம் இரனைதீவில் மீள்குடியேற வேண்டியவர்கள் ஏனெனில் அவர்கள் குறித்த பகுதிக்கு பூர்விக சொந்தக்காரர்கள் என்றும், தற்போதைய தடையினால் அவர்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே உடனடித் தீர்வாக குறித்த மக்களது தங்கு தொழிலுக்கான அனுமதியை கடற்ப்படையினரிடமிருந்து பெற்றுக்கொடுக்குமாறும்,  அவசர கடிதம் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அனுப்பிவைத்ததோடு, கடந்த 05-05-2016 அன்று மாலை 5 மணியளவில் இரணைமாதா நகருக்கு நேரடி விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்க்கனவே அமைச்சருடன் கலந்துரையாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் மேற்ப்படி விஜயத்தின்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்ப்படி சந்திப்பின்போது அமைச்சர் மக்களோடு கலந்துரையாடுகையில், மீண்டும் இரணைதீவில் குடியேற விரும்புகின்றீர்களா என்று வினவிய வேளை, அங்கே சமூகமளித்திருந்த அனைத்து மக்களும் தாம் மீள்குடியேற ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும், அதற்கு முன்பாக தமது தீவில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான தடையை விலக்கி உடனடியாக தொழில் செய்யும் நிலையை தமக்கு உருவாக்கித்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே இவ்வாறான மக்களது கருத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டெனிஸ்வரன், இரணைதீவில் மீள்குடியேறுதல் தொடர்பாகவும், தற்போதைய தொழிற் தடையை நீக்குவது தொடர்பாகவும் தான் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் குறித்த மக்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும், அவர்களது பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கும் தாம் தம்மாலான சகல உதவிகளையும் வழங்குவதாகவும் அத்தோடு இரணைமாதா நகர் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் வினைத்திறனாக இயங்குவதால் அவர்களது கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கு மின்சார இணைப்பை தனது பிரமாண அடிப்படையிலான நிதியில் இருந்து பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு தனது கருத்தைத் தெரிவிக்கையில், முன்னய காலத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் ஒரு குழப்பமான நிலை மக்கள் மத்தியில் காணப்பட்டதாக அதாவது ஒரு சாரார் மீள்குடியேற வேண்டும் என்றும் இன்னொரு சாரார் இரணைமாதா நகரிலேயே வசிக்க விரும்புவதாகவும், ஓர் குழப்பமான நிலைப்பாட்டில் இருந்ததை தாம் அறிவதாகவும், இப்போது இந்த கருத்தில் தெளிவுள்ளவர்களாய் எல்லோரும் இருப்பதனால், மீள்குடியேற்றம் எதிர்வரும் காலத்தில் இடம்பெறுவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட சந்திப்பானது சுமார் மூன்று மணிநேரம் தொடர்ந்ததாகவும், அக்கிராமத்து மக்களது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், எது எவ்வாறு இருப்பினும் விரைவில் இரணைதீவு மக்களது குறைகள் தீர்க்கப்படும் என்றும் அதிலே முதலக்கட்டமாக தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதி மிக விரைவாக பெற்றுத்தரப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares