பிரதான செய்திகள்

இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்ச்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக்கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக்கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தலைதூக்கிய இனவாத சக்திகள் இன்று நாட்டில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. இதனால், இனங்களுக்கிடையில் முறுகல், பொருளாதார பின்னடைவு, வெளிநாட்டு முதலீடுகள் வராமை என அது எமது நாட்டுக்கும், நாட்டின் பொருளாதாரத்தின் மீதுமே அதிக தாக்கம் செலுத்தியுள்ளன.

சிங்கள தேசியவாத சக்திகள் கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் தோற்றம் பெற்றன. அதைக் கட்டுப்படுத்த தவறியதால் கடந்த ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியைக் கொண்டு வர முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்தனர். ஆனால், இந்த ஆட்சியிலும் இனவாத செயற்பாடுகள் தொடர்கதையாகவே மாறியுள்ளது.

இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளாகும். இதனால் எமது பொருளாதாரம் சீர்குலைந்து அதல பாதாளத்துக்குள் சென்றுக்கொண்டுள்ளது. நாட்டின் அமைதியற்ற சூழல் கருதி முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன்வருவதில்லை. இனவாதம் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக மாறியுள்ளது. இதனை அனைத்து தரப்பும் உணர வேண்டும்.

இனவாதத்தை பரப்பி இனங்களுக்கிடையில் முறுகளைத் தோற்றுவிப்பது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை உரிய முறையில் செய்ய வேண்டும். சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸார் சுயாதீனமாக இயங்க வேண்டும்.

நாட்டில் இனவாதத்தை பரப்புகின்றவர்கள் யார்? எந்த அமைப்பு அவற்றை செய்கின்றது என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் தெரியும் அரசின் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் தெரியும். எனவே, அவ்வாறான அமைப்புக்களையும், அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்ய அல்லது கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இனவாதம் சமூக ஊடகங்கள் வாயிலாகவே அதிகம் பரப்பப்படுகின்றன. சிலர் தமது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொண்டே இனவாதத்தை பரப்புகின்றனர். மேலும் பலர் அடையாளத்தை காண்பிக்காது சமூக ஊடகங்களில் கொக்கரிக்கின்றனர். இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனவாதத்தை பரப்புகின்ற சமூக தளங்களை முடக்க வேண்டும். அத்துடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சில வரையரைகளை மேற்கொள்வதன் ஊடாக தலைதூக்கியுள்ள இனவாதத்தை ஓரளவுக்கு தணிக்க முடியும்.

நுகேகொடை, விஜயராம பகுதியில் குறுகிய காலப்பகுதிக்குள் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான நான்கு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அதனுடன் சம்பந்தப்பட்ட நபர் பொது பல சேனா அமைப்பின் தீவிர உறுப்பினர் என பொலிஸார் அறிவித்துள்ளனர். அவ்வாறாயின் நாட்டின் பல பாகங்களிலும் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் யார்? என்பதை பொலிஸார் இணங்கண்டு – கைது செய்து அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, ஞானசார தேரர் கைது விடயத்தில் பொலிஸாரின் மந்த கதி கவலையளிக்கின்றது. தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸார் ஒரு தேரரைக் கைது செய்ய இவ்வளவு நாள் கடத்துவது என்பது எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியாது – எஸ்.எம்.மரிக்கார்!

Editor

காலி-கிந்தோட்டை,வவுனியா தாக்குதல்! வட மாகாண சபையில் பிரேரணை

wpengine

நாயைக் கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்

wpengine