பிரதான செய்திகள்

இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்

மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்,

பாரிய மனித உரிமை மீறல்களுடன், சின்னஞ்சிறு பாலகர்கள் முதல் கர்ப்பிணித் தாய்மார் வரை பாரபட்சமின்றி கொன்று குவித்து வரும் மியன்மார் அரசு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை உலக நாடுகள் பாரியளவில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இந்த நூற்றாண்டின் பாரிய இனச் சுத்திகரிப்பில் ஒன்றாக கருதப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் குறித்து தொடர்ந்தும் உலக நாடுகள் மௌனம் சாதிப்பதும், மென்மையான போக்கை கடைப்பிடிப்பதும் மனித குல அழிவுக்கு துணை போவதற்கு சமம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போது உலக நாடுகள் தமது சுய அரசியல் லாபம் கருதி கடைப்பிடித்த பல்வேறு கொள்கைகள் காரணமாகவே நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.

எனவே இதே தவறை மியன்மார் விவகாரத்தில் உலக நாடுகள் விட்டு விடக் கூடாது. பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்னர், அந்த மக்கள் நிர்க்கதியான பின்னர் அந்த மக்களுக்கு வழங்கப்படும் நீதி அந்த மக்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும்.

ஆகவே கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்க முன்வர வேண்டும்,

இலங்கை முஸ்லிம்கள் ஒன்று பட்டு ரோஹிங்யா மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டும்.

அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்கள் தமது அன்றாட தொழுகையின் போதும், பிரார்த்தனைகளின் போதும் ரோஹிங்யா மக்களுக்காக இரு கரமேந்திப் பிரார்த்திக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த சம்மந்தன்

wpengine

கொழும்பில் பல வாகனங்களுக்கு சீல் வைத்த மாநகர சபை

wpengine

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

wpengine