பிரதான செய்திகள்

அரசியல்வாதிகள், உலமாக்கள், செல்வந்தர்கள் சமுதாய நலனுக்காக ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்-றிஷாட்

அமைச்சின் ஊடகப்பிரிவு

மத்ரசாக்களின் வளர்ச்சியும் ஹாபிழ்கள், உலமாக்கள் மற்றும் மௌலவிமார்களின் பெருமளவான உருவாக்கமுமே முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களில் இஸ்லாமிய விழுமியங்களை வலுப்படுத்தவும் மூட நம்பிக்கைகள் அருகிப் போகவும் பெரிதும் வழிவகுத்தன.

அந்நிய கலாசாரங்களுடனும் பழக்க வழக்கங்களுடனும் ஒட்டி வாழ்ந்த சில முஸ்லிம் கிராமங்களில் இஸ்லாமிய வாழ்வு தழைத்தோங்கவும் இவை உதவி இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திவுரும்பொல ஜாமியா மனாருல் ஹுதா அரபுக்கலாசாலையின் 16வது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பட்டம் பெற்ற மாணவர்களையும் கௌரவித்தார்.

கல்லூரி அதிபர் அஹமட் ஹலாலுதீன் மிஸ்பாஹி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி எம்.எம். முபாரக், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் உட்பட கல்லூரி அதிபர்கள், உலமாக்கள் மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

மத்ரசாக்கள் பல்வேறு கஷ்டங்கள் மத்தியிலே உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் மத்ரசாக்களின் நிர்வாகம் எதிர் நோக்கி வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து சளைக்காமல் மாணவர்களுக்கு இஸ்லாமிய கல்வியை வழங்கி வருகின்றன.

முன்னொரு காலத்தில் நமது நாட்டிலே இஸ்லாமிய பெண்கள் கற்பதற்கென மத்ரசாக்கள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. அந்த நிலை இறைவனின் உதவியினால் இன்று மாற்றியமைக்கப்பட்டு பெண்களுக்கான அரபுக் கலாசாலைகள் பல ஆரம்பிக்கப்பட்டு அதன் அடைவுகளை நாம் ஈட்டி வருகின்றௌம்.

முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கு திவுரும்பொல கிராமமும் பங்களித்துள்ளது என்பதை அறிந்து நான் சந்தோஷம் அடைகின்றேன்.

மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசை 1986 ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தார். அதன் பின்னர் 1988ல் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. அதுவும் வடமேல் மாகாண சபைக்கே முதன்முதலாக வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் இந்த கிராமத்தில் உள்ள பள்ளி வாசலிலேயே துஆ பிரார்த்தனையுடன் அந்த சவாலான பணியை ஆரம்பித்துள்ளார் என்பது கடந்த கால வரலாறு.

அது மட்டுமன்றி மர்ஹூம் அஷ்ரப் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்ததன் பின்னரேயே இலங்கை முஸ்லிம்கள் கலாநிதி பட்டங்களையும் ஆய்வுப்பட்டங்களையும் பட்ட மேற்படிப்புக்களையும் அதிகளவில் பெற்று சிறந்த கல்வியாளர்களாகவும், கல்வி மேதைகளாகவும் நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றார்கள் என்பது பேருண்மையாகும். அதுவரையில் நமது சமூகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய கலாநிதிகளே இருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. அம்பாறை மாவட்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கலாநிதி பட்டம் பெற்ற புத்திஜீவிகள் இருப்பது நமக்கு பெருமை தருகின்றது.

கல்வியிலாளர்கள் கல்வித் துறையில் கொடிகட்டிப் பறப்பது நமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் அவர்கள் சமுதாய உயர்வுக்காக தமது பங்களிப்பை நல்குவதில் அசிரத்தை காட்டி வருகிறார்கள் என்பதே எனது அவதானிப்பாகும்.

அறிவில் உயர்ந்த இந்த சாரார் பட்டங்கள் பெற்ற பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்வதும் தமது தொடர்புகளைப் பயன்படுத்தி தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கல்விக்காக அனுப்புவதிலுமே தமது கவனத்தை அதிகளவில் காட்டுகின்றார்களேயொழிய சமுதாயத்தின் மீதான தமது பார்வையை செலுத்த தவறிவிடுகின்றனர். இது வேதனையானது. இவர்கள் ஆலோசனை வழங்கக் கூடியவர்களாகவும் திட்டங்களை வகுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

அரசியல்வாதிகள், உலமாக்கள் கல்வியியலாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் சமுதாய நலன் கருதி ஒரே நேர்கோட்டில் பயணிப்பதன் மூலமே சமூகத்தை மேம்படுத்த முடியும்.

அதே போன்று மார்கக் கல்வி பெற்றவர்கள் அந்த கல்வியுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. தமது கல்வியை விரிவுபடுத்துவதன் மூலம் சமுதாயத்துக்கு ஆக்க பூர்வமான பங்களிப்பை நல்க முடியும்.

நமது சமுதாய அமைப்பிலே ஒரே ஊருக்குள் சண்டை பிடிப்பதும், ஊருக்குள்ளே போட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சகஜமாகிவிட்டது. இது தவிர்க்கப்பட்டு தூர நோக்குடன் நாம் பயணிக்க வேண்டும்.

சில தனியார் ஊடகங்கள் இன்று நயவஞ்சகத் தனமாக செயற்படுகின்றன. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துவதும் இஸ்லாத்தை அழிப்பதும் மற்றைய சமூகத்தின் மத்தியிலே நம்மைப்பற்றி பிழையாக எடுத்துச் சொல்வதுமே அவர்களின் பிரதான தொழிலாக மாறி இருக்கின்றது. நமது சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்கள் திறமையானவர்களாகவும், எழுத்து வன்மை உள்ளவர்களாகவும் இருந்த போதும் அவர்கள் உண்மைகளை உரத்துச் சொல்ல முடியாதவாறு ஊடக முகாமைத்துவம் அவர்களை கட்டுப்படுப்படுத்தி இருப்பது வேதனையானது என்றும் அமைச்சர் கூறினார்.

Related posts

வாக்களித்துவிட்டு! படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் காலையில் பதில் போல் சொல்லக்கூடாது

wpengine

தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது-மைத்திரிபால

wpengine

இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine