அமைச்சர் சம்பிக்கவின் தொலைபேசிகளை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் இளைஞன் ஒருவர் ஆடம்பர வாகனமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு தொடர்பிருப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பெப்ரவரி மற்றும் மார்ச் மாத தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணையொன்றை நடத்துமாறு நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளான கயான் விதுரங்க, சித்தீக் ஆகியோரின் தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விபத்து நடைபெற்ற பிரதேசத்தில் இருக்கும் சீசீடிவி காணொளிகளின் தொகுப்பு ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினர் வழங்கியுள்ள 24 சீசீடிவிகளின் காணொளிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிப்பதா இல்லையா என்பது குறித்து ஏப்ரல் 27ம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares