அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு ஏற்றுக் கொள்ள மாட்டேன் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு நடைபெற்றால் அமைதியான முறையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் நவம்பா் மாதம் 3 ஆம் திகதி நடைபெறுகிறது. அதில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் களம் காண்கிறாா்.

அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. உலகிலேயே அந்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள், ஜனாதிபதி தோ்தலில் தபால்வழி வாக்குப் பதிவை அனுமதித்துள்ளன. இந்த முறையில் வாக்குச்சீட்டானது வாக்காளா்கள் கோரிக்கையின்படி, அவா்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும். அதில் வாக்கினைச் செலுத்தி அவா்கள் தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

தபால்வழி வாக்குப்பதிவு நடைமுறைக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா். அதைப் பயன்படுத்தி ஜோ பிடன் தரப்பினா் முறைகேட்டில் ஈடுபடுவா் என்று அவா் குற்றஞ்சாட்டி வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது, தோ்தலுக்குப் பிந்தைய ஆட்சி மற்றும் அதிகார மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்ததாவது:

அமைதியான ஆட்சி மாற்றம் பற்றி தோ்தல் முடிவு வந்த பிறகுதான் முடிவு செய்ய முடியும். தபால்வழி வாக்குப்பதிவுக்குக் கடும் கண்டனத்தைத் தொடா்ந்து பதிவு செய்து வருகிறேன். அத்தகைய வாக்குப் பதிவு பேரழிவை ஏற்படுத்தும். அத்தகைய நடைமுறை மூலமாக நடைபெறும் தோ்தலின் முடிவுகளை ஏற்க முடியாது.

தபால்வழி வாக்குப்பதிவு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அதன் மூலமாகத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றால், ஆட்சி மாற்றம் இருக்காது. உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். தோ்தல் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. தீா்வு வரும்வரை தற்போதைய அரசு தொடா்ந்து ஆட்சியில் இருக்கும். தபால்வழி வாக்குப்பதிவை ஒருபோதும் ஏற்க முடியாது என்றாா் ஜனாதிபதி டிரம்ப்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்கள் தொடா்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுத்துவிட்டாா். எனினும், ஜனாதிபதி டிரம்ப்பின் கருத்துக்கு பலா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபை உறுப்பினா் மிட் ரோம்னி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஜனநாயகத்துக்கான அடிப்படையே அமைதியான வழியில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதுதான். அது இல்லையெனில் சா்வாதிகாரம் தலைதூக்கும். அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள இந்த உரிமையை ஜனாதிபதி டிரம்ப் மீற முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares