அநுர திஸாநாயக்கவுக்கு பதில் அடி கொடுக்கும் அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் எந்தவொரு மோசடியும் இடம்பெறவில்லை.  இதன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றோம் என்று  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நிலையியற் கட்டளை 23/3 இன் கீழ் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுர திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடைய பதிலுரையில் மேலும் கூறுகையில்,

65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயமும் முறையற்ற தகவல்களைக் கொண்டே கூறப்பட்டுள்ளது. 22ம் திகதி செப்டெம்பர் 2015ம் ஆண்டு 65 ஆயிரம் வீடுகளை வடக்கில் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான நிதிச் செலவீனமானது வரவு செலவு திட்டத்தைப் பாதிக்காதவாறு பெறப்பட்டு 12 வருடங்களில் கடனை மீளச் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அந்த வீடுகளை அமைப்பதற்கான கேள்விமனுக்கள் கோரப்பட்டன.

எட்டு நிறுவனங்கள் விலைமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்முக நிறுவனமே முறையான தரமான விலைமனுவைத் தாக்கல் செய்திருந்ததோடு சர்வதேச வங்கியொன்றின் ஊடாக கடனை மீளத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தது.

அத்துடன் மிகக் குறைந்த வட்டி வீதமான 1.34, 1.74 வரையான வட்டியையே அறவிடுவதற்கும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் தான் சர்வதேச தரம் வாய்ந்த அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.

மேலும், 12லட்சமாக இருந்த வீட்டின் தொகை 21லட்சமாக அதிகரித்திருப்பதற்கான காரணம் மேலதிக பெறுமதி அதிகரித்தமையேயாகும். விசேடமாக ஆரம்ப கணிப்பீட்டின் போது 133 ரூபாவாக காணப்பட்ட டொலரின் பெறுமதி தற்போது 143 ரூபாவாக அதிகரித்திருப்பதால் தற்போது வீட்டுக்கான செலவீனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வீடானது நவீனமானதாகும். அதாவது வைபை, சூரிய ஒளிச் சக்தியைப் பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பம், மலசலகூட வசதிகள் ஆகியன காணப்படுகின்றன. மேலும் இந்த வீட்டுக்கான தளபாடங்களை குறித்த நிறுவனம் இலவசமாக வழங்குகின்றது. ஆகவேதான் அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி குறித்த வீட்டு செயற்திட்டம் தொடர்பான செயற்றிட்டக்குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு நிதி அமைச்சு, கிராமிய பொருளாதார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளையும் உள்ளடக்கியுள்ளது.

விசேடமாக குறித்த வீட்டுத்திட்டத்துக்கான மாதிரி வீடு யாழில் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியும் அங்கு வருகை தந்து பார்வையிட்டிருந்தார். அவ் வீட்டுத் திட்டம் தொடர்பான விமர்சனங்களை போக்குவதற்காக மக்கள் கருத்துக்கள் பெறப்படுகின்றன. இந்த மாத இறுதிக்குள் அக்கருத்தறிக்கை வெளியிடப்படவுள்ளது என்றார்.

இதன்போது குறுக்கீடு செய்த அநுர திஸாநாயக்க எம்.பி. வீடுகளை நிர்மாணிப்பதற்கான கேள்விப்பத்திரத்தையும் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரத்தையும் ஏன் ஒரே நிறுவனத்திற்கு வழங்கினீர்கள். 12 லட்சம் ரூபாவிலிருந்து 9 லட்சம் ரூபாவரை அதிகரித்திருப்பதற்கான காரணம் என்ன என கேள்வியெழுப்பியதோடு அதற்கான அங்கீகாரம் எவ்வாறு கிடைத்ததெனவும் வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன்;

ஒட்டுமொத்த கேள்விக்கோரலையும் நாம் ஒன்றாக வழங்கவில்லை. குறித்த நிறுவனம் பன்முக நிறுவனம் என்பதாலும் முறையான செயற்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமையாலுமே ஒப்பந்தத்திற்கான அனுமதியை வழங்கினோம். எமது அமைச்சில் காணப்படும் சில அதிகாரிகள் வழங்கும் தவறான தகவல்களைப் பயன்படுத்தி கேள்விகளை முன்வைத்து தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம் என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares