அத்துமீறிய சிங்கள குடியேற்றம்! சமலின் கவனத்திற்கு கொண்டு வந்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்
தரை பகுதிகளில் அம்பாறை மாவட்ட பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால்
அபகரிக்கப்படும் காணிகள் குறித்தும் இதனால் அப்பகுதியில் ஏற்படவுள்ள இன
முரண்பாடுகள் குறித்தும் மகாவலி அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் சமல் ராஜபக்சவின் கவனத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார்.

நேற்று(புதன்கிழமை) அமைச்சர் சமல் ராஜபக்சவினை இரா.சாணக்கியன் மகாவலி பி
வலய அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வரும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை
பகுதிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான
குழுவினர் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிவித்தார்.

அத்துடன், அதனால் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும்
பிரச்சனைகள் குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய தமிழ் சிங்கள இன முரண்பாடுகள்
குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் இதன் பின்னணியில்
கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதையும் சுட்டி காட்டியிருந்தார்.

இதனை கேட்டறிந்த அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஒன்றை
நடாத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறித்து முடிவுகளை விரைவில்
அறிவிப்பதாக இரா.சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு  செயற்படுத்தப்படும் இந்த அபகரிப்பு
நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares