கட்டுரைகள்பிரதான செய்திகள்

அடுத்த தேர்தல் எதுவாக இருக்கும்…?

இலங்கையின் அரசியல் தளம்பல் இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது அனைவரது பார்வையும் தேர்தல் ஒன்றை நோக்கி திரும்பியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால் அரசை வீழ்த்தி காட்டலாம் என்ற சிந்தனையில் எதிர்க்கட்சியினரும், தேர்தல்களை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசும் உள்ளது. அடுத்த தேர்தல் எதுவாக அமையும் என்பதே அனைவரதும் பலத்த எதிர்பார்ப்புடைய விடயமாக அமைந்துள்ளது.

இலங்கையில் பிரதானமாக ஜனாதிபதி, பாராளுமன்ற, மாகாண, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் என நான்கு தேர்தல்கள் நடைபெறும். இதில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஏனைய மூன்று தேர்தல்களில் இரண்டரை வருடங்கள் நிறைவுறாமல் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியாது. அதாவது அடுத்த வருடம் ( 2023 ) மார்ச்சுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை எதிர் பார்க்க முடியாது. அண்மையில் தேர்தல் ஒன்று வருமாமாக இருந்தால், அது மாகாண அல்லது உள்ளூராட்சி மன்ற தேர்தலாகவே அமையும் என்பது வெளிப்படையானது.

அதிகமானவர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவே அரசு தயாராகி வருவதாக கூறுகின்றனர். தற்போதைய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட் காலத்தை ஒரு வருடத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது தேர்தலை எதிர்கொள்ள முடியாமையின் வெளிப்பாடென்பது வெளிப்படையான உண்மைகளில் ஒன்று. உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட் காலத்தை ஒரு வருடத்தால் நீடிக்கும் அதிகாரம் மாத்திரமே அரசுக்குள்ளது. இத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவருக்குள் அரசு விரும்பியோ அல்லது விரும்பாமலோ நடத்த வேண்டும்.

மாகாண சபை தேர்தலை பொறுத்த மட்டில் எல்லை நிர்ணயம் முடிந்து, அது பாராளுமன்றத்தில் அனுமதி பெறும் வரை தேர்தலை நடாத்த முடியாது. இதனை தேவையான கால எல்லை வரை காலம் தாழ்த்த அரசுக்கு முடியும். தற்போது அரசு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் தேர்தல்களை தவிர்க்கவே முயலும். அது தேர்தலொன்றை சந்திக்க முயல்வது தற்கொலைக்கு ஈடானது. அந்த வகையில் நோக்கும் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் நடத்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், அதனை முதலில் நடத்தி முடிக்கவே அரசு பெரிதும் விரும்பும் என்பது பலரது ஊகமாக உள்ளது. அரச உள் வீட்டு தகவல்களின் படி, அரசு தற்போது மாகாண சபை தேர்தலை நடத்த தயாராகி வருவதாகவே அறிய முடிகிறது. இதனை இன்று தினேஷ் குணவர்த்தன உறுதி செய்திருந்தார். இதன் பின்னால் உள்ள திட்டம் புரியவில்லை.

அரசு முதலில் மாகாண சபை தேர்தலை நடத்த முனைவது எதற்காக என்ற வினாவுக்கான பதில் இன்னும் யாரிடமும் தெளிவாக இல்லை. தற்போதைய அரசு பொருளாதாரத்தில் மிக இக்கட்டான நிலையில் இருப்பதால், அதனை எதிர்கொள்ள இந்தியாவின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கின்றது. அண்மையில் கூட நிதிமயமைச்சர் பெசில் ராஜபக்ஸ இந்தியாவுக்கு ஒரு விஜயத்தை திட்டமிட்டு, அதனை பிற்போட்டிருந்தார். இந்தியாவுக்கு உதவி கேட்டு செல்ல முன்பு, இந்தியா இலங்கை தமிழர்களுக்கு தீர்வாக பெற்று கொடுத்த மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கிருக்கலாம். தற்போதைய நிலையில் இந்தியாவை திருப்தி செய்ய இலங்கை செய்ய முடியுமான இலகுவான ஒன்றும் இதுவேயாகும். ” நாங்கள் தோல்வியடைலாம் என்ற நிலையிலும் உங்களுக்காக தேர்தலை நடத்தியுள்ளோம் ” என கூறி இந்தியாவின் உதவியை பெற தற்போதைய அரசு முனையலாம்.

முதலில் மாகாண சபை தேர்தல் நடைபெறுமாக இருந்தால், அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தலும் நடைபெறும். அடுத்த வருடம் மார்ச்சில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைக்கு வரும். இவ் அதிகாரம் கிடைத்தவுடன் பாராளுமன்றத்தை கலைக்கும் சிந்தனையில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் மிக குறுகிய காலத்தினுள் மூன்று தேர்தல் நடந்தேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Related posts

அஸ்வெசும மேன்முறையீடுகளை கணினி கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்கான கால அவகாசம் நிறைவு!

Editor

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

wpengine

முஸ்லிம் ஆசிரியர்கள் விடயத்தில் பொய் சொல்லும் மனோ அமைச்சர்

wpengine