Breaking
Fri. Mar 1st, 2024
(சுஐப் எம் காசிம்)

தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது.

தென்கிழக்கு கரையோர நிர்வாக மாவட்டம், ஐக்கிய இலங்கைக்குள் சகல இனங்களையும் திருப்திப்படுத்தும் நீதியான அதிகாரப் பகிர்வு, வடக்கும் கிழக்கும் தற்போது நடைமுறையில் உள்ள படியே தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடு, தேர்தல் முறை மாற்றத்தில் எந்த ஓர் இனமும் பாதிக்கப்படக் கூடாதென்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தத் தீர்வுத்திட்ட முன்மொழிவு அமைந்துள்ளதாக அக்கட்சியின் அரசியல் விவகார, சட்டப்பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்த போது,

மக்கள் காங்கிரஸின் “அரசியல், மறுசீரமைப்ப விசேட குழு” அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக ஆறு தடவைகள் கூடியது. தற்போது இறுதி வடிவம் பெறப்பட்டு முன் மொழிவு நகல் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஜனநாயக விழுமியங்களையும் பண்புகளையும் பலப்படுத்தும் வகையில் இந்தத் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் அரசியல் ஆர்வலர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கருத்துரையாடல்களையும் கட்டம் கட்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த “மக்கள் மஷூரா மன்றம்” சார்ந்த பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் மட்டுமின்றி சிறுபான்மை, சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றையும் தனித்தனியாக சந்திக்க விசேட குழு முடிவு செய்துள்ளது.

இவ்வாறான கலந்துரையாடல்களின் பின்னர் தீர்வுத்திட்ட முன்மொழிவு அரசியல் பீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் அசல் வடிவம் தலைவர் ரிஷாட்டின் அங்கீகாரத்திற்கென மீண்டும் கையளிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி ருஸ்தி தெரிவித்தார்.

/div>

இந்த முன் மொழிவில் மக்களின் அடிப்படை உரிமைகளான மொழியுரிமை, வாக்குரிமை மற்றும் அரச கொள்கைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேசியக் கொடிப் பயன்பாடு என்பவை தொடர்பில் உறுதியான இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறை மாற்றத்தைப் பொறுத்தவரையில் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநித்துவமே தமிழ் பேசும் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கக் கூடியதென்ற நிலைப்பாட்டில் கட்சி மிகவும் உறுதியாக உள்ளது. எனினும் இதற்குப் பிரதியீடாக புதிய தேர்தல் முறை மாற்றங்கள் கொண்டுவரப்படும் போது அதன் மூலம் சிறுபான்மை மக்களினதும் சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சி ஏற்படக்கூடாது என்ற விடயத்தையும் உரிய தரப்பினரிடம் கட்சியின் தலைமை சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் நீதிமன்றத்தின் உதவியையும் நாடுவதற்கு கட்சி தயங்காது என்பதையும் சட்டத்தரணி ருஸ்தி சுட்டிக்காட்டினார்.

புதிய தேர்தல் முறை மாற்றம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஓர் இனத்தொகுதி செறிந்து வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய முறையில் தொகுதி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எந்த ஒரு தீர்வுத்திட்ட முயற்சியும் முஸ்லிம் மக்களை பாதிக்காத வகையிலும் அதே வேளை தமிழ்- முஸ்லிம்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தாத வகையிலும் அமைய வேண்டுமென்பதையே நாட்டுத் தலைமைகளிடம் எமது கட்சியின் தலைவர் ரிஷாட் வலியிருத்தியிருப்பதாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

இந்த அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான விஷேட குழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீரலி, சட்டத்தரணி என் எம் ஷஹீட், செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், டொக்டர் அனீஸ், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், பொத்துவில் எஸ் எஸ் பி மஜீத், டொக்டர் யூசுப் கச்சி மரிக்கார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மற்றும் ஆய்வாளர் எம் ஐ எம் மொஹிதீன் ஆகியோர் அடங்குகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.

* தென்கிழக்குப் பிரதேசத்திற்கென புதிய நிர்வாக மாவட்டம்
 
* வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பது போன்ற ஏற்பாடு
 
* ஐக்கிய இலங்கைக்குள் நேர்த்தியான அதிகாரப் பகிர்வு
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அமைப்புத்திட்ட முன் மொழிவில் சுட்டிக்காட்டு.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *